தூத்துக்குடி:தூத்துக்குடியில் கிராம உதயம் என்ற தன்னார்வ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, அந்த அமைப்பின் 25வது ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி இன்று (செப்.22) தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு அப்துல் கலாம் விருது வழங்கும் விழா மற்றும் 2 ஆயிரம் பேருக்கு மரக்கன்று மற்றும் மஞ்சள் பை வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் மற்றும் விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாகவே உள்ளது. தற்போது மீடியா மற்றும் செல்போன், வாட்ஸ் அப் உள்ளிட்ட நவீன சாதனங்கள் மூலம் இந்த குற்றங்கள் வெளியே தெரிகின்றன.
இது வரவேற்க வேண்டிய விஷயம். இந்த குற்றங்களைத் தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளது. ஆனால், இவை முறையாக கட்டுப்படுத்த பல கட்டங்களில் முடியவில்லை. சட்டங்கள் முறையாக செயல்படுத்த முடியாமல், சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தப்பித்து விடுகின்றனர். இதை தடுக்க வேண்டும்.
அதேபோன்று, மன அழுத்தத்தினால் திடீரென்று சில நிமிடங்களில் எடுக்கும் முடிவால் தற்கொலைகள் நடக்கின்றன. இதற்கு வாழ்க்கையில் எந்த பிரச்னை வந்தாலும் எதிர்த்து போராடக் கூடிய மனநிலையை உருவாக்க வேண்டும். மரணத்திற்கு தற்கொலை தீர்வாகாது. வாழ்க்கையில் போராட பழகிக் கொள்ள வேண்டும். தற்போது மத்திய அரசு 33 சதவீதம் இட ஒதுக்கீடு பெண்களுக்காக கொண்டு வந்துள்ளது.