ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் செய்தியாளர் சந்திப்பு தூத்துக்குடி: கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி, தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அப்போதைய அதிமுக அரசு சார்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக விசாரணை அறிக்கை தற்போதுள்ள திமுக தலைமையிலான சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறியுள்ளபடி, துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று (டிச.12) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த காளியப்பன் தங்கை ரதி, “ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு கண்டிப்பாக நீதி வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை வழக்கு பதிய வேண்டும்” எனக் கூறினார்.
இதனையடுத்து பேசிய ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பின் பாத்திமா பாபு, “ ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை ஆணையம் தாக்கல் செய்து இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில், படுகொலைக்குத் தொடர்பான பெயர் குறிப்பிட்ட பின்பும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இப்போதைய ஆட்சியாளர், ஆட்சிக்கு வரும் முன் தண்டிப்போம், கூண்டில் ஏற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தார். மேலும் ஆலையை அகற்ற சிறப்புச் சட்டம் இயற்றி தூக்கி எறிவோம் எனவும் கூறினார். இதை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவன ஈர்ப்பு மனு அளித்தோம். தமிழ்நாடு முதலமைச்சருக்கு பொதுமக்கள் சார்பாக வைக்கும் கோரிக்கை, படுகொலை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆலை அகற்றப்பட வேண்டும் என்பதுதான்” என்றார்.
தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை படுகொலை சம்பந்தமாக, கொலை குற்ற வழக்கின்கீழ் கைது செய்வோம் என தற்போது நடத்திய கூட்டத்தில் கூறியதன் அடிப்படையில், தற்போது 100 பேர் மட்டுமே வந்தோம். தமிழ்நாடு முதலமைச்சர் கொலைக் குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவர் எனக் கூறினார்.
அதேநேரம் தேர்தல் நேரத்தில் சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலை அகற்றப்படும் எனவும் கூறினார். ஆனால் சிறப்பு கொள்கைகள்கூட வகுக்கப்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடந்து நான்கரை வருடம் ஆகியும், இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இந்த நிகழ்வில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த பாத்திமா பாபு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் இறந்த 13 பேரின் குடும்பத்தினர் இருந்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் இறந்த காளியப்பனின் தாயார் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர்.
மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக தூத்துக்குடி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து மனு.. கலெக்டர் ஆபிஸில் போலீசார் குவிப்பு!