தூத்துக்குடி மாவட்டம் மேல கூட்டுடன் காடு பகுதியைச் சேர்ந்தவர் மந்திரன் என்ற மகாராஜன் (23), இவருடைய நண்பர் முத்து ராஜசேகர்(19). இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவலராக பணி செய்துவருகின்றனர்.
இந்நிலையில் வேலை முடிந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் தெய்வ செயல் புரத்தை அடுத்து வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், மகாராஜன் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். விபத்தை பார்த்தவர்கள், இது குறித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் படுகாயமடைந்த உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முத்து ராஜசேகரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மகாராஜனின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.