தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமா பாணியில் நடந்த சேசிங்.. கஞ்சா கடத்தல்காரர்களை விரட்டிப் பிடித்த காவல்துறை! - thoothukudi news

Tuticorin crime news: தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 540 கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

A luxury car used to smuggle ganja
கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 10:19 AM IST

தூத்துக்குடி:தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், விளாத்திகுளம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெரியசாமிபுரம் பகுதியில் சூரங்குடி காவல்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது மதுரையில் இருந்து அதிவேகமாக வந்த சொகுசு காரை மறித்து சோதனையிட முற்பட்டுள்ளனர். ஆனால், போலீசாரைக் கண்டதும் கார் நிற்காமல் சென்றுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் வேம்பார் கடலோர காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வி தலைமையிலான போலிஸ்சார் இன்னோவா காரை துரத்திச் சென்று சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். பின்னர், காரை சோதனை செய்ததில் சாக்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து காரில் கஞ்சா கடத்த முயன்ற ராமநாதபுரம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த தர்மேந்திரன் (36) மற்றும் தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் (41) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் இருவரையும் சூரங்குடி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கொண்டு செல்ல இருந்ததும், சாக்கு மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட கஞ்சா 540 கிலோ இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து, போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர். இக்கடத்தல் தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, இதற்கு முன் இது போன்ற கஞ்சா கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மழை நின்று ஒரு வாரமாகியும் வடியாத வெள்ள நீர்.. பூந்தமல்லியில் படகில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்!

ABOUT THE AUTHOR

...view details