தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’எழுத்துலகில் பேச்சு வழக்குதான் நிலைபெறும் எனக் கூறியவர்’ - எழுத்தாளர் கி.ராவின் மகன்

தூத்துக்குடி: "எழுத்துலகில் உரைநடையைவிட பேச்சுவழக்கு தான் நிலைபெறும் எனக் கூறியவர் எனது தந்தை. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது" - கி.ரா.வின் மகன் பிரபாகர்

எழுத்தாளர் கி.ரா.வின் இறப்பு குறித்து - மகன் பேட்டி!
எழுத்தாளர் கி.ரா.வின் இறப்பு குறித்து - மகன் பேட்டி!

By

Published : May 19, 2021, 2:49 PM IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தை சேர்ந்தவரும் தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்தவருமான முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் முதுமை காரணமாக நேற்று முன்தினம் (மே.17) இயற்கை எய்தினார். அவரது உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமத்தில் அரசு மரியாதையுடன் இன்று (மே.19) அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, மறைந்த எழுத்தாளர் கி.ரா.வின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இடைசெவல் கிராமத்தில் உள்ள அவருடைய பூர்வீக வீட்டில் வைக்கப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர், சமுதாய அமைப்பினர், வாசகர்கள், ஊர் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், எழுத்தாளர் கி.ரா குறித்து அவருடைய இரண்டாவது மகன் பிரபாகர் நமது ஈ.டிவி பாரத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ’’எழுத்துலகில் உரைநடை வழக்கத்தை மாற்றி பேச்சு வழக்கைக் கொண்டு வந்தவர் கி.ராதான். எழுத்துலகில் இனி உரைநடை வழக்கத்தைவிட பேச்சு வழக்கு தான் நிலைபெற்று இருக்கும் எனக் கூறியவரும் அவர்தான். அவரது கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்கு மத்திய அரசு சாகித்திய அகாதெமி விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அவருடைய இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது எங்களுக்கு மட்டுமல்ல அவருடைய வாசகர்களுக்கும் பேரிழப்பு ஆகும். அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசும் புதுச்சேரி அரசும் முழு மரியாதை செலுத்தின. எனது தந்தையின் இறுதிச் சடங்கு இன்று 11 மணிக்கு மேல் தொடங்கியது. இந்த நல்லடக்கம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 21,362 பேர் கரோனாவிலிருந்து மீண்டனர்

ABOUT THE AUTHOR

...view details