தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரியில் ஆதவா தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவராக பாலகுமரேசன் செயல்பட்டு வருகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்களை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களாக பணி அமர்த்தி, அவர்களுக்கு மாதம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் எனக் கூறி ஒவ்வொரு ஆசிரியர்களிடம் இருந்தும் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வசூல் செய்துள்ளார்.
பணி செய்து வந்த ஆசிரியர்களுக்கு மாத மாதம் சம்பளமும் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில், பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு கடந்த ஏழு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்களை ஆசிரியர்கள் தொடர்பு கொண்டதில் சரியான பதில் இல்லை.
பாலகுமரேசனும் தலைமறைவாகி விட்ட நிலையில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் பணி என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்த ஆதவா தொண்டு நிறுவன தலைவர் பாலகுமரேசனை கைது செய்து, தங்களுக்கு உடனடியாக தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
ஆனால், பள்ளி கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாததால், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.