ஆதார் அட்டை ஒரு தனிமனிதனின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்தியாவில் அரசு மற்றும் அரசு சாரா சேவைகளைப் பெறுவதற்கும் பயன்படுகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் பெய்துவரும் கனமழையில் நூற்றுக்கணக்கான ஆதார் கார்டுகள் மிதந்துவந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை காரணமாக தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது. மாநகராட்சியின் முக்கிய இடங்களில் புகுந்துள்ள மழைநீரை வெளியேற்றுவதற்காக 40 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு நீர் வெளியேற்றும் பணி நடந்துவருகிறது. மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவுப்படி, 20 இடங்களில் தற்காலிகமாக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தண்ணீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 33 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் பணி நடந்துவருகிறது. பஞ்சாயத்து, கிராமப்புறப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் விபத்துகளைத் தவிர்ப்பதற்காக வளர்ந்துள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணி நடக்கிறது.