தூத்துக்குடி மாவட்டம், பூபாலராயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கிங்சன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இதுபோல், அந்தோனிராஜ், டேனியல்ராஜ் ஆகிய இருவரும் இவருடன் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் மூவரும் நேற்று (ஜன. 01) புத்தாண்டு தினத்தை மது அருந்தி கொண்டாட திட்டமிட்டனர்.
கொலை
இதையடுத்து, மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு, மூவரும் சிலுவைபட்டி கடற்கரையிலுள்ள மொட்டைகோபுரம் கடற்கரைபகுதிக்கு வந்து மது அருந்தியுள்ளனர்.
அப்போது, மதுபோதையில் மூவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு முற்றியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்தோனிராஜ், டேனியல்ராஜ் ஆகிய இருவரும் கிங்சனை பீர் பாட்டிலால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில், கிங்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காவல் துறைக்கு தகவல்
இதைக் கண்டு, அதிர்ச்சியடைந்த இருவரும், தாங்கள் கொலை செய்தது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாளமுத்துநகர் காவல்துறையினர் உயிரிழந்த கிங்சனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
பின்னர் அந்தோணி ராஜ், டேனியல்ராஜ் ஆகிய இருவர் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஆபாசமாக பேசியதால் நண்பனை கொலை செய்த உதவி இயக்குநர் கைது