தூத்துக்குடி: மாநகராட்சிக்குட்பட்ட வண்ணார் 2ஆவது தெருவில் வசித்து வந்தவர் முனியலட்சுமி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மாடசாமியை பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு மூன்று பெண், ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளன.
முனியலட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். மூத்த மகளான 17 வயது சிறுமி, பாலிடெக்னிக் படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தி உள்ளார். இந்நிலையில் முனியலட்சுமியின் மகள் அப்பகுதியில் உள்ள ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இதனை முனியலட்சுமி கண்டித்து உள்ளார். இதனைத் தொடர்ந்து நண்பர்களுடன் பேசுவதை கண்டித்த தாயை கொலை செய்ய முடிவு செய்த 17 வயது சிறுமி நேற்று (மார்ச் 28) காலை தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தாய் முனியலட்சுமியை தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து நடைபெற்ற விசாரணையில் சிறுமி, தனது தாய் முனியலட்சுமி தன்னை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தியதால் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குமூலம் உண்மைதானா? என்று சிறுமி மற்றும் அவரது நண்பர்களான முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கம் உள்ளிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக தூத்துக்குடியில் பிற்பகலில் ஒரு கொலையும் மாலையில் ஒரு கொலையும் என நடைபெற்றது.
இதற்கிடையில், அன்றைய தினம் இரவு தூத்துக்குடி சத்யா நகரில் மூதாட்டி ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று பெற்ற மகளே தாயை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஐஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை - மேற்கு வங்கத்தில் ஒருவர் கைது