தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம், குறுக்குச்சாலையையடுத்த ஜெகவீரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி. 102 வயதுடைய இவர், முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவரது மனைவி சீதாலட்சுமி 2013ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி உயிரிழந்துவிட்டார். இவருக்கு 4 மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், தன்னை பராமரிக்காத மகனிடமிருந்து சொத்துகளை மீட்டுத்தர கோரிக்கைவிடுத்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.
இதையடுத்து அவர் கூறுகையில், "தற்போது என்னை ஜெகவீரபாண்டியபுரத்தில் உள்ள என்னுடைய மகள் குருவம்மாள், அவரது கணவர் கெங்கையா, பிள்ளைகள் பராமரித்துவருகின்றனர். ஆனால் எனது நான்கு மகன்களில் ஒருவர்கூட என்னை பராமரிக்கவில்லை.
நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் இருந்தபோதுகூட எனது மருத்துவச் செலவுகள் அனைத்தையும் எனது மகள் குடும்பத்தினர்தான் ஏற்றுக்கொண்டனர்.
தற்போது 102 வயதாகிய நிலையில் இருந்துவரும் என்னை பல்வேறு சூழ்நிலைகளில் எனது மகள் குருவம்மாள் மட்டுமே கவனித்துவருகிறார். எனது மகன்கள் யாரும் என்னை கவனிக்காததால் எனது மகன் ராமசுப்புவுக்கு அளித்த சொத்து பத்திரப்பதிவை ரத்துசெய்து எனது சொத்துகளை மீட்டுத்தர வேண்டும் எனக்கூறி கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு அளித்துள்ளேன்" என்றார்.
குருசாமியின் மகன் ராமசுப்பு 1991ஆம் ஆண்டு குருசாமியை சார்பதிவாளர் அலுவலகம் அழைத்துச் சென்று மோசடியாக கையொப்பம் பெற்று சொத்துகளை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
கோட்டாட்சியர் விஜயா தனது அறையைவிட்டு வெளியே வந்து கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காரில் இருந்த 102 வயது முன்னாள் ராணுவ வீரரான குருசாமியைச் சந்தித்து அவரது கோரிக்கைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மகன் கொலை செய்ய முயற்சிப்பதாக பெற்றோர் புகார் - வைரலாகும் காணொலி