தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - 441 வது திருவிழா

தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலயத்தின் 441வது திருவிழாவின் தங்கத் தேர் பவனியை முன்னிட்டு ஆகஸ்ட் 5 (சனிக்கிழமை) தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார்.

local holiday
ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

By

Published : Jul 26, 2023, 4:38 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடியில் தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, 441வது திருவிழா இன்று காலை திருப்பலிகள் முடிந்து, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நிர்வாகிகள் முன்னிலையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படைசூழ கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கப்பட்டது.

மேலும், கொடியேற்றும் போது விண்ணுயர பனிமய அன்னையை வேண்டி குரல் எழுப்பியும், சமாதானப் புறாக்களை பறக்கவிட்டும் விழா சிறப்பாக தொடங்கப்பட்டது. இவ்விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தத் திருவிழாவை முன்னிட்டு சுமார் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 50 சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்புப் பணியும், 4 உயர் கோபுரங்கள் மூலம் கண்காணிப்புப் பணியும், மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சாதாரண உடையுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 10 வருடத்திற்குப் பின் 16-வது முறையாக ஆகஸ்ட் 5 (சனிக்கிழமை) தங்கத்தேர் பவனி நடைபெற இருக்கிறது. இதில், உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், பல மாநிலங்கள் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்டப் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் கலந்து கொள்வார்கள்.

இந்நிலையில், ஆகஸ்ட் 5 தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் இவ்விடுப்பு பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் பத்திரிகை செய்தியில் கூறியுள்ளார்.

மேலும், திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் (06005) ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று சென்னை எழும்பூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஆகஸ்ட் 4ஆம் தேதி அதிகாலை 3.10 மணிக்கு தூத்துக்குடியை வந்தடைகிறது. அதே போன்று மறுமார்க்கத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று சிறப்பு ரயில் (06006) தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.

மேலும், இவ்விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் மீண்டும் சென்னை செல்வதற்கு வசதியாக, ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும், ஆகஸ்ட் 6ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சீர்காழி நகராட்சி மீது சிறு வியாபாரிகள் புகார்: இலவச தள்ளு வண்டிகள் பெற கையூட்டு கேட்பதாக குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details