தூத்துக்குடி:புதுமண தம்பதியை கொலை செய்த வழக்கில் சம்மந்தப்பட்ட 5 பேர் மீதும் ஒரேநாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முருகேசன் நகர் பகுதியை சேர்ந்தவர், வசந்தகுமார். இவரது மகன் மாரி செல்வம்(24). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவரும், திருவிக நகரைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மகள் கார்த்திகா(20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்தது கார்த்திகாவின் தந்தைக்கு தெரியவந்துள்ளது.
இதனிடையே, மாரி செல்வம் குடும்பம் பொருளாதாரத்தில் சற்று பின்தங்கியவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தந்தையின் எதிர்ப்பை மீறி, கடந்த அக்.30 ஆம் தேதி விட்டில் இருந்து வெளியேறிய கார்த்திகா மாரி செல்வத்துடன் கோவில்பட்டிக்குச் சென்று சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பின்னர் தம்பதிகள் இருவரும் கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடியில் உள்ள முருகேசன் நகரில் உள்ள மாரி செல்வம் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளனர். இந்நிலையில் நவ.3 ஆம் தேதி மாலை 6 மணியளவில் மாரி செல்வம், கார்த்திகா இருவரும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து வீட்டிற்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: மின்சாரம் தாக்கிய நண்பனைக் காப்பாற்றச் சென்ற அண்ணன் தம்பி பலி..! தாய், நண்பனுக்கு தீவிர சிகிச்சை..
இந்நிலையில் புதுமண தம்பதியியை வீடு புகுந்து அரிவாளால் தாக்கி கொலை செய்த இந்த வழக்கில் தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியைச் சேர்ந்த பரத் விக்னேஷ்குமார்(25), முத்துராமலிங்கம்(47), கே.வி.கே. நகர் பகுதியைச் சேர்ந்த இசக்கிராஜா(23), ஏரல் பகுதியில் உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி(24), தூத்துக்குடி சங்கர் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி(27) மற்றும் சிலரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கின் குற்றவாளியான இந்த ஐந்து பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு இதுகுறித்து பரிந்துரை செய்தார்.
இதன்பேரில், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி குற்றவாளிகள் ஐந்து பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வை காரணம் காட்டி, திருமணமான மூன்றே நாளில் காதலித்து திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதியினரை படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், படுகொலை செய்த குற்றவாளிகளை தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது, இது போன்று வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஆண்டு இதுவரை போக்சோ, போதை பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 169 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வன விலங்குகளை விரட்டச் சென்ற மாமன், மைத்துனர் மின்சாரம் தாக்கி பலி..! ஆம்பூர் அருகே நடந்த சோகம்..!