தூத்துக்குடி: கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமம், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் செல்வக்குமார் (வயது 43) கட்டிடதொழிலாளியாக பணிபிரிந்து வருகிறார். இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களுக்கு கார்த்திகா (வயது 21), சுதர்ஷினி (வயது 19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கார்த்திகா நெல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
சுதர்ஷினி 12ஆம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி வீட்டின் மாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அடுத்து செல்வக்குமார் உடலை, அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து செல்வக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி மற்றும் இரு மகள்களிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். முதலில் 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் செல்வக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விசாரணையில் செல்வக்குமார் மனைவி பாக்கியலட்சுமி, அவரது இரு மகள்கள் கார்த்திகா, சுதர்ஷினி, இவர்களுடன் கார்த்திகாவை காதலித்து வரும் அதை ஊரைச் சேர்ந்த கந்தவேல் ஆகியோர் தலையணை மற்றும் துண்டால் அமுக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.