தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 23, 2022, 9:12 PM IST

ETV Bharat / state

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 40 ஆயுதப்படை காவலர்கள் நியமனம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 40 ஆயுதப்படை காவலர்களை நியமிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் 40 ஆயுதப்படை காவலர்கள் நியமனம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 40 ஆயுதப்படை காவலர்கள் நியமனம்

மதுரை: திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருச்சுந்தரராக பணியாற்றும் சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது.

கோயிலில் கடவுள் மட்டுமே விஐபி:கோயில் நிர்வாகம் தரப்பில், கோயிலின் உள்ளே மற்றும் வெளியே கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் தரப்பில், 30 ஆயுதப்படை காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும், திருவிழா காலங்களில் கூடுதலாக காவல்துறையினர் நியமிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டனர். மேலும், கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, எனவும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி, தற்போது செய்துள்ள ஏற்பாடுகள் போதுமானதாக உள்ளதா? என கேள்வி எழுப்பினார். மேலும், “ விஐபி தரிசனம் மூலம் தேவை இல்லாத பல பிரச்சினைகள் எழுந்து வருகிறது இதன் மூலம் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர். மத நம்பிக்கை உள்ளவர்களே கோயிலுக்கு வருகின்றனர். கோயிலை பொறுத்தவரை கடவுள் மட்டுமே விஐபி, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விஐபிகளை கடவுள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்.

கோயிலின் கட்டளைதாரர்கள் 10 நிமிடம் மட்டுமே சிறப்பு தரிசனம் வழங்கப்பட வேண்டும். திருச்சுந்தரர்கள் பக்தர்களை தகாத வார்த்தையில் பேசுவதாக தொடர்ந்து புகார் வருகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர், வருவாய்த்துறையினர், இந்து அறநிலையத் துறையினர் சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்க கூடாது. அவர்களும் பக்தர்களைப் போன்றே நடத்தப்பட வேண்டும்.

கோயிலில் 40 ஆயுதப்படை காவலர்கள்:கோயிலின் உள்ளே மற்றும் வெளியே போதுமான அளவு குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும். கடற்கரை முறையாக தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். திருச்செந்தூர் கோயிலில் உள்ளே உள்ள நாழிக்கிணறு பகுதி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மேலும், அங்கு உடைமாற்றம் செய்ய போதுமான வசதி செய்து தரப்பட வேண்டும். கோயிலின் உள்ளே, வெளியே உள்ள பகுதிகள் சுத்தமாக இருப்பதை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும்.

கோயிலில் குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும், அன்னதான கூடம் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு அனுமதி சீட்டினை முறைகேடாக பயன்படுத்தும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திருச்செந்தூர் கோயிலில் 40 ஆயுதப்படை காவல்துறையினரை நியமிக்க வேண்டும். அவ்வப்போது சூழ்நிலைகளைப் பொறுத்து காவல்துறையினரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த அனைத்து உத்தரவுகளையும் 3 வாரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:தேர்தலின்போது அளித்த 505 வாக்குறுதிகளில், 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன - முதலமைச்சர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details