தூத்துக்குடி:கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர் வசந்த குமார். இவர் தற்போது தூத்துக்குடி மாநகரில் உள்ள முருகேசன் நகர் 1-வது தெருவில் வசித்து வருகிறார். வசந்த குமார் லாரி லோடு மேன் வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்துவருகிறார்.
இவர்களது ஒரே மகனான மாரிசெல்வம் (24), டிப்ளமோ படித்து விட்டு அருகே உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதேபோல், திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் கார்த்திகா(20) பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
இந்த நிலையில், வசந்தகுமார் இதற்கு முன் திரு.வி.க.நகர் பகுதியில் வசித்து வந்தபோது, முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவுக்கும், மாரிசெல்வதிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இது பெற்றோருக்கு தெரியவந்து பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 1 வருடத்திற்கு முன்பு தான், வசந்த குமார் குடும்பத்துடன் முருகேசன் நகர் பகுதிக்கு குடியேறியுள்ளார்.
கடந்த 30 ஆம் தேதி திடீரென மாரி செல்வம் - கார்த்திகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சொந்த ஊரான கோவில்பட்டியில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அங்கு உறவினர்கள் வீட்டில் இருந்து வந்த அவர்கள் நேற்று (நவ.02) காலை 11 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள முருகேசன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது, மாலை 3ஆம் மைல் பகுதியில் மாரிசெல்வத்தை மர்ம நபர்கள் மூன்று பேர் அரிவாளை கொண்டு வெட்ட முயற்சித்துள்ளனர். அப்போது, மாரிசெல்வம் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், மாலை 6:00 மணியளவில் வீட்டில் மாரிசெல்வம்-கார்த்திகா ஆகிய இருவரும் இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் 6 பேர் திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். கணவன்-மனைவி இருவரையும் அந்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வர அங்கிருந்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் நகர காவல் துறை கண்காணிப்பாளர் சத்தியராஜ், ஊரக காவல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை நடத்தினார். பின்னர், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ஜினோ வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து புறப்பட்டு அருகில் இருந்த ரயில்வே கேட் வரை சென்று திரும்பியது. ஆனால், யாரையும் பிடிக்கவில்லை.
இந்நிலையில், இன்று (நவ.03) காலையில் மாரிசெல்வம்-கார்த்திகா இருவரின் உடற்கூறாய்வு முடிந்து, பெண் வீட்டார் வசம் பெண்ணை ஒப்படைக்காமல் பெண்ணின் உடலைப் பார்க்க மட்டுமே அனுமதி அளித்து, மாப்பிள்ளை வீட்டாரிடமே உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மாரிசெல்வத்தின் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், இருவர் உடலும் வாகனம் மூலம் சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள மின்சார எரியூட்டு மையத்தில் தகனம் செய்யப்பட்டது.
புதுமண தம்பதி கொலையை நேரில் பார்த்த பக்கத்து வீட்டு பாட்டி ராஜபுஷ்பம் கூறுகையில், “நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஆறு பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்றவுடன் 'டம் டம்' என சத்தம் கேட்டது. நான் வீட்டிற்குள் போய்விட்டு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டில் உள்ளே சென்று அந்த கும்பல் திரும்பி வந்ததை நேரில் பார்த்தேன். 6:15 மணிக்கு உள்ளே சென்று 6.30 மணிக்கு வெளியே வந்து விட்டனர்.