தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.35 லட்சம் கிராம பொது பணம் லாக்கருடன் திருட்டு..கிராம மக்கள் அதிர்ச்சி! - Velayuthapuram

விளாத்திகுளம் அருகே பட்டப்பகலில் ரூ.35 லட்சம் கிராம பொது பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.35 லட்சம் கிராம பொது பணம் லாக்கருடன் திருட்டு
விளாத்திகுளம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 1:38 PM IST

தூத்துக்குடி: கருவேல மரங்களை ஏலம் விட்டு கிடைத்த ரூ.35 லட்சம் கிராம பொது பணத்தை, பட்டப்பகலில் கொள்ளையடித்து சென்றவர் மீது புகார் அளித்தும், இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே இ.வேலாயுதபுரம் கிராமத்தில், கிராம மக்களுக்கு பாத்தியப்பட்ட பொதுவான நிலப்பகுதியில் உள்ள வேலிக்கருவேல மரங்களை, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கிரமத்தின் பொது காரியங்களுக்கு செலவு செய்து, மீதமுள்ள பணத்தை அங்குள்ள "தேவேந்திர மஹால்" என்ற திருமண மண்டபத்தில், 7 சாவிகள் கொண்டு திறக்கப்படும் லாக்கரில் பத்திரமாக வைத்திருப்பது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு ஊர் மக்களுக்கு பாத்தியப்பட்ட நிலப்பகுதியில் உள்ள கருவேல மரங்கள் ஏலம் விடப்பட்டது. இதனையடுத்து, ஏலத்தின் மூலமாக கிடைத்த ரூ.40 லட்சம் பணத்திலிருந்து ரூ.5 லட்சத்தை கிராமத்தின் பொது காரியங்களுக்கு செலவு செய்து விட்டு, மீதமுள்ள ரூ‌.35 லட்சத்தை திருமண மண்டபத்தில் உள்ள லாக்கரில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இ.வேலாயுதபுரம் கிராம தலைவர் சர்க்கரை என்பவரின் இல்லத் திருமண விழாவிற்காக, கிராம மக்கள் அனைவரும் தூத்துக்குடி சென்றுள்ளனர். இந்த சமயத்தில், கிராமத்தில் மக்கள் யாரும் இல்லை என்பதை அறிந்துக்கொண்ட அதே கிராமத்தைச் சேர்ந்த சாலமன் ராஜ் மற்றும் அவரது 4 கூட்டாளிகள், கிராம பொது பணம் வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தின் கதவுகளை உடைத்து ரூ.35 லட்சம் பணத்தை லாக்கருடன் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், இவர்களை தடுக்க முயன்றவர்களையும் அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பட்டப்பகலில் 5 நபர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியில் இருந்தவர்கள், இது குறித்த தகவலை கிராமத்தினருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இ.வேலாயுதபுரம் கிராம மக்கள், பணம் கொள்ளயடிக்கப்பட்டது தொடர்பாக சூரங்குடி காவல் நிலையத்தில் பணத்தை திருடி சென்ற சாலமன் உட்பட 5 பேர் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், பட்டப்பகலில் கிராம பொது பணம் ரூ.35 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர் மீது புகார் அளித்தும், இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சூரங்குடி காவல் நிலைய போலீசார் மீது கிராமத்தினர் புகார் தெரிவித்திருப்பதோடு, உடனடியாக மாவட்ட காவல் துறையினர், பணத்தை கொள்ளையடித்தவர்களை பிடித்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:நீலகிரி அருகே கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details