தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணியைச் சேர்ந்தவர், ராமசாமி என்பவரது மகன் ராமசுந்தரம் (40). இவர் கோவில்பட்டியில் உள்ள 4 கோயில்களில் அர்ச்சகராக இருந்து வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு ஆம்னி வேனில் வந்த நபர்கள், ராமசுந்தரத்திடம் மெத்தை, தலையணை மற்றும் பேன் ஆகியவற்றை 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல், அவரிடம் குலுக்கல் முறையில் பரிசு விழும் என்றும் கூறி ஆசைக்காட்டி உள்ளனர்.
இது தொடர்பாக ராமசுந்தரத்தை தொடர்பு கொள்வதற்காக, அவரது செல்போன் எண்ணையும் அவர்கள் பெற்றுக் கொண்டுச் சென்றுள்ளனர். பின்னர் சில நாட்கள் கழித்து ராமசுந்தரத்தை தொடர்பு கொண்ட விற்பனையாளர்கள், ராமசுந்தரத்துக்கு இருசக்கர வாகனம் மற்றும் பல பரிசுகள் விழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் முன்பணம், வருமானவரி போன்றவை செலுத்த வேண்டியுள்ளது என்ற பல்வேறு காரணங்களைக் கூறிய விற்பனையாளர்கள் தரப்பு, ராமசுந்தரத்திடம் இருந்து பல வங்கி கணக்குகள் மூலம் சிறிது, சிறிதாக 14 லட்சத்து 28 ஆயிரத்து 860 ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளது.
பின்னர் தான் மோசடி செய்யப்பட்டு ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த ராமசுந்தரம், இது தொடர்பாக NCRPஇல் (National Cyber crime Reporting Portal) புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல்.பாலாஜி சரவணன், தூத்துக்குடி தலைமையிடத்து காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில், உதவி ஆய்வாளர் சுதாகரன் உள்பட காவல் துறையினர் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.