தூத்துக்குடி: தூத்துக்குடி நாசரேத் பகுதியைச் சேர்ந்த இளைஞரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிய நிலையில் இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர், சின்னத்துரை. இவரது மகன் செல்வதிரவியம் (30). இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் செல்வதிரவியம் நாசரேத் பஜார் வந்து விட்டு மூக்குப்பீறிக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் திடீரென அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. பின் அங்கிருந்து தப்பி ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் நாசரேத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். மேலும் செல்வதிரவியத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு சோதனை - 4 பேர் கைது, 11 பிடியாணைகள் நிறைவேற்றம்!
இந்நிலையில் இளைஞர் செல்வதிரவியம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக நடந்த விசாரணையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மூக்குப்பீறியில் கோவில் திருவிழா நடந்துள்ளது. இதில் செல்வதிரவியத்திற்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இந்த மோதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் செல்வதிரவியத்தின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி மறுத்துள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் நாசரேத் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். இது குறித்து செல்வதிரவியத்தின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினர் உடலை வாங்க ஒப்புக்கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்பாக கருப்பசாமி, முத்து மனோ, முப்புடாதிராஜா ஆகிய மூவரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைந்து உள்ளனர். மேலும் இவ்வழக்குத் தொடர்பாக நாசரேத் போலீசார் சிலரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெரியகுளம் எம்.எல்.ஏ.வுக்கு ஆபாச வீடியோ அனுப்பி பணம் பறித்த வழக்கு... ராஜஸ்தானில் ஒருவர் கைது!