தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதூர்பாண்டியாபுரம் பகுதியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாகச் சந்தேகத்திற்கிடமான முறையில் லாரி, சரக்கு வாகனம் வந்தன. அவற்றை நிறுத்தி சோதனையிட முயன்றபோது, காவல் துறையினரைக் கண்ட சரக்கு வாகன ஓட்டி தப்பியோடினார்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் லாரியை மடக்கிப்பிடித்து அதன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ் (26) என்பதும், லாரி, சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசியைக் கடத்திவந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி, சரக்கு வாகனத்தைப் பறிமுதல்செய்த காவலர்கள் அனிஷை கைதுசெய்து சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.
தொடர் விசாரணையில் தமிழ்நாட்டின் தென் மாவட்ட பகுதிகளிலுள்ள ரேஷன் கடைகளிலிருந்து அரிசி மூட்டைகளைக் கள்ளத்தனமாகப் பெற்று தூத்துக்குடியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான குடோனில் பதுக்கிவைத்திருந்து, கேரளா, வெளிச்சந்தையில் அதிக லாபத்திற்கு விற்றுவந்தது தெரியவந்தது.