தூத்துக்குடி:அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீரற்ற இதய நோயால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியைச்சேர்ந்த 60 வயதிற்கு மேற்பட்ட இரண்டு நோயாளிகள் இதய நோய்ப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர்களின் இதயத்தின் வேகம் மிகவும் குறைவாக இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இரண்டு நோயாளிகளுக்கும் பேஸ் மேக்கர் கருவி இதயத்தில் பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இரண்டு நோயாளிகளுக்கும் சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு முதல்முறையாக சீரற்ற இதயத்துடிப்பினால் இதய செயலிழப்பு ஏற்பட்ட இரண்டு நோயாளிகளுக்கு நிரந்தர பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இரண்டு நோயாளிகளும் உள்ளனர். தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், இதுவரை பேஸ் மேக்கர் பொருத்துவதற்கு சென்னை, மதுரைக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது.
தற்போது தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த சிகிச்சைகள் தற்போது அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிகிச்சை தனியார் மருத்துவமனை செய்வதென்றால் இந்த சிகிச்சைக்காக சுமார் ரூ.4 லட்சம் வரை செலவாகும். ஆனால்,
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இதய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் ஒருங்கிணைந்த முயற்சியாலும் மருத்துவமனை முதல்வர் கலைவாணி வழிகாட்டுதலின்பேரில் உறைவிட மருத்துவர் சைலஸ், மருத்துவமனை கண்காணிப்பாளர் ததேயூஸ், டாக்டர் குமரன், டாக்டர் துளசிராம் ஆகியோரின் தனிப்பட்ட கவனத்தினாலும் முதல்முறையாக மருத்துவர்கள் இந்த சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.