தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் சுபாஷ் நகரைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன்(22). இவர் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு உள்பட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று, சங்கரேஸ்வரன் ஒருவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து சங்கரேஸ்வரனை கைது செய்தார்.
அதே போல், தூத்துக்குடியில் ராஜபதி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மீதும் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் நாசரேத் காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி மற்றும் திருட்டு வழக்குகள் உள்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், முத்துக்குமார் ஏரல் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த நபரிடம் ஏற்பட்ட தகராறில் அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் முத்துக்குமார் மீது ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.