தூத்துக்குடி சாந்தி நகரைச் சேர்ந்த மாணவர்கள் மணிசங்கர் (வயது 18), அஜித்குமார் (19). மணிசங்கர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அஜித்குமார் ஜக்கம்மாள் புரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நண்பர்களான மணிசங்கரும், அஜித்குமாரும் தசரா திருவிழாவை முன்னிட்டு மாலை அணிய முடிவு செய்தனர்.
இதற்காக, இவர்களோடு இன்னும் நான்கு நண்பர்கள் சேர்ந்து மொத்தம் ஆறு நபர்கள் மூன்று மோட்டார் சைக்கிள்களில் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் காமராஜர்புரம் சீனந்தோப்புவிலக்கு பகுதியில் சென்றபோது லாரி ஒன்று இவர்களின் மீது மோதியதில் மணிசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அஜித்குமாரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.