பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், ஊரகச் சாலைகள் மேம்படுத்துவது குறித்தான கருத்தரங்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை முக்கியச் சாலைகளுடன் இணைக்கும் வகையில் பிரதம மந்திரி சாலைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது என்றார்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளரைச் சந்தித்துப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர், "இந்தத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் தரமான சாலைகள் அமைப்பது குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
மாவட்டத்தில் இரண்டாயிரத்து 676 சாலைகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 412, கிராமச் சாலைகள் இரண்டாயிரத்து 264 சாலைகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 403 ஊராட்சிகளில் உள்ள இரண்டாயிரத்து 250 கிலோ மீட்டர் நீளத்திற்கு உள்ள சாலைகளை முக்கியச் சாலைகளுடன் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக 14 சாலைகள் அமைக்கப்படுகின்றன. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் இதுவரை இரண்டு கட்டங்களாக 132 கோடி ரூபாய் மதிப்பில் 544 கிலோமீட்டர் பல்வேறு சாலைகள் போடப்பட்டுள்ளன" என்றார்.