முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது ஜெயந்தி விழா: அரசியல் கட்சியினர் மரியாதை - Respect to Muthuramalinga Thevar at Thoothukudi
தூத்துக்குடி: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, அவரது முழு உருவச் சிலைக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் மூன்றாம் மைலில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமுதாய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக தரப்பில் தூத்துக்குடி ஆவின் தலைவர் சின்னதுரை தலைமையில் அதிமுக நிர்வாகிகள் திரண்டுவந்து முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
திமுக தரப்பில் தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கீதாஜீவன் தலைமையில் திமுக செயற்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு முத்துராமலிங்கத் தேவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மூன்றாம் மைலில் அமைந்துள்ள தேவரின் திருஉருவச் சிலைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் மாநகர், மாவட்டம் முழுவதும் சாதி ரீதியான சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாதவண்ணம் தடுப்பதற்காகத் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.