தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு, கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நாளை ஸ்டெர்லைட் தூப்பாக்கிச் சூடு நினைவு தினத்தையொட்டி சுமார் 1,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். 144 தடை உத்தரவு இருப்பதால் 5 பேருக்கு மேல் பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
மாவட்டத்தில் 113 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 77 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில், இருவர் மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள அனைவரும் மகாராஷ்டிரா, சென்னை, செங்கல்பட்டு பகுதிகளிலிருந்து ஊர் திரும்பியவர்கள். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மட்டும் 1,000 பேர் தூத்துக்குடி வந்துள்ளனர்.