தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் 'மாட்டுவண்டிப் பந்தயம்' (Bullock Cart Race) சிறப்பு பெற்றது. அந்தவகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை (Pongal Festival) முன்னிட்டு, வஉசி நற்பணி மன்றம் (VOC Charity Forum Trust Thoothukudi) நடத்திய பெரிய மாட்டுவண்டி பிரிவில் 11 மாட்டுவண்டிகளும், சிறிய மாட்டுவண்டி பிரிவில் 16 மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாட்டுவண்டி பிரிவில் 32 வண்டிகளும் என மொத்தம் 59 மாட்டு வண்டிகளும், 118 காளைகளும் போட்டியில் கலந்துகொண்டன. இந்தப் போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த மாண்டு வண்டிகள் பங்கேற்றன.
செக்காரக்குடி கிராமத்திலிருந்து பொட்டலூரணி வரையிலான சாலையில் பந்தயம் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டிக்கு 14 கி.மீ. தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு 10 கி.மீ. தூரமும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிக்கு 8 கி.மீ. தூரமும் போட்டிக்கான எல்லையாக அறிவிக்கப்பட்டது. பந்தயம் தொடங்குவதற்கு முன்னர், விவசாயிகள் தங்கள் காளைகளை வண்டியில் பூட்டி, கற்பூர ஆரத்தி காட்டி தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்தனர்.
அப்போது காளைகளும் 'நாங்கள் போட்டிக்குத் தயார்' என்பதைப் போல, கழுத்தை ஆட்டி மணிகளை ஒலிக்கச் செய்தன. இதனைத்தொடர்ந்து, முதலில் பெரிய மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சிறிய மாட்டுவண்டிப் பந்தயமும், இறுதியாக பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பந்தயமும் நடைபெற்றது. பந்தய எல்லைகளை வந்தடைந்த முதல் மூன்று மாட்டுவண்டிகளின் வீரர்கள், வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளுக்கு பரிசு:பெரிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, முதல் பரிசாக ரூ.20,023, இரண்டாம் பரிசாக ரூ.18,023, மூன்றாம் பரிசாக ரூ.16,023 வழங்கப்பட்டது. சிறிய மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, முதல் பரிசாக ரூ.14,023, இரண்டாம் பரிசாக ரூ.13,023, மூன்றாம் பரிசாக ரூ.12,023 வழங்கப்பட்டது. இதேபோல, பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் பந்தயத்தில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு, முதல் பரிசாக ரூ.9,023, இரண்டாம் பரிசாக ரூ.8,023, மூன்றாம் பரிசாக ரூ.7,023 வழங்கப்பட்டது.