திருவாரூர் மாவட்டம் பெரிய மில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கராத்தே மாரிமுத்து. இவர் மீது திருவாரூர் காவல் நிலையத்தில் கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழிப்பறி வழக்கில் கைதாகி நாகப்பட்டினம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 7ஆம் தேதி பிணையில் வெளியே வந்தார். ஆனால், மறு நாளே (ஜூலை 8) திருவாரூர் ரயில் நிலையத்தில் உடல் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இவருடன் பிணையில் வெளிவந்த மணி என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. நாகப்பட்டினம் கிளைச் சிறையிலிருந்து பிணையில் வந்த கராத்தே மாரிமுத்து, மணி ஆகிய இருவரையும் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் அவரது நண்பர்கள் வாடகை காரில் திருவாருக்கு அழைத்து வந்தனர். அனைவரும் மது போதையில் இருந்த நிலையில், மாரிமுத்துவை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.