திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரைப் பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவர் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மகள் பிரீத்தி (21) திருமணம் ஆகாதவர். இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.
அண்மையில் நடந்த போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற பிரீத்திக்கு மத்திய அரசின் தபால் துறையில் வேலை கிடைத்தது. வீட்டில் இருந்து செல்ல வெகுதூரம் என்பதால் மன்னார்குடி தாமரைக்குளம் பகுதியில் உள்ள, தனது தாத்தா வீட்டில் தங்கி கடந்த 18 நாட்களாக எடகீழையூர் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தில் தபால் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தாத்தா வீட்டில் இருந்த பிரீத்தி திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அப்போது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் வேதனை தாங்க முடியாமல், பிரீத்தி அலறவே அதனை கேட்ட அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பிரீத்தி உடலில் 80 விழுக்காடு தீக்காயங்கள் இருந்ததால் அவர் உடனடியாக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேற்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.