திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபாரதி. இவருடைய கணவர் விஷ்ணு பிரகாஷ்(38). இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஜெயபாரதி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். தப்பளாம்புலியூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் ஜெயபாரதி வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர் மீது சரக்கு வாகனம் ஒன்று மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய திருவாரூர் தாலுகா காவல்துறையினர், முதலில் விபத்து வழக்காக பதிவு செய்தனர். ஜெயபாரதியின் உறவினர்கள், இது விஷ்ணு பிரகாஷ் திட்டமிட்டு நடத்திய கொலை எனப் புகாரளித்தனர்.