திருவாரூர்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் பருவமழையில் பாதிக்கப்பட்டுச் சேதமடைந்த சம்பா, தாளடி பயிர்களை காப்பதற்காக அடி உரமாக யூரியா, பொட்டாசியம் போட விவசாயிகள் முயன்றுவரும் இந்த நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.
திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இதனிடையே, திருவாரூர் மாவட்டம் முழுவதும் உரத்தட்டுப்பாடு நிலவி வருவதால் உரம் தெளிக்க முடியாமல் விவசாயிகள் செய்வது அறியாது தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
உரங்கள் இருப்பில் இல்லை
மேலும், சம்பா பயிர்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கியதால் வேர்கள் முழுவதும் அழுகி வரும் நிலையில், உரம் தெளிப்பதற்காகக் கூட்டுறவுச் சங்கங்களில் சென்று யூரியா, பொட்டாசியம் கேட்டால் போதுமான உரங்கள் இருப்பில் இல்லை எனக் கூறி அலுவலர்கள் திருப்பி அனுப்பி விடுவதாக விவசாயிசள் குற்றம்சாட்டுகின்றனர்.
மழையில் பாதிக்கப்பட்ட பயிர் பயன் இல்லாமல் போய்விடும்
தனியாரிடம் சென்று கேட்டால் இருப்பு இல்லை என அலைக்கழித்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த சம்பா, தாளடி பயிர்களைக் காத்து மீண்டும் மறு உருவாக்கம் செய்ய, சரியான நேரத்தில் உரம் தெளித்தால் மட்டுமே பயிர்களைக் காக்க முடியும், காலம் தாழ்த்தி உரம் தெளித்தால் பயன் இல்லாமல் போய்விடும் என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
மழையில் பாதிக்கப்பட்ட பயிர் எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியரும், வேளாண் துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுத்து திருவாரூர் மாவட்டத்திற்குக் கூடுதலாக உரங்களை வினியோகம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆய்வுக்கு வந்த மத்திய குழு - ஹிந்தியில் புகார் அளித்த விவசாயிகள்