அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழ்நாடு அரசே எங்கே எனது வேலை?, என்ற தலைப்பில் ஒரு கோடி இளைஞர்களைச் சந்திக்கும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருவாரூர் மாவட்டம் புதிய ரயில் நிலையம் அருகே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்யக்கோரி ஏராளமான இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'தமிழ்நாடு அரசே எங்கே எனது வேலை?' - இளைஞர்கள் - நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு குற்றச்சாட்டு
திருவாரூர்: ஒரு கோடி இளைஞர்ளைச் சந்திக்கும் கையெழுத்து இயக்கம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு உள்பட ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நிதிநிலை அறிக்கையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் 95 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்துவிட்டு வேலைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் பணம் கொடுத்து வேலை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்தால் மட்டுமே வேலை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதிசெய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!