தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்க தயங்கமாட்டோம் - பி.ஆர்.பாண்டியன் - We will not hesitate to stand alone in all 234 State assembly constituencies

திருவாரூர் : 2021ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் விவசாயிகளை வேட்பாளராக களமிறங்க தயங்க மாட்டோம் என தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் எச்சரித்துள்ளார்.

234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்க தயங்கமாட்டோம் - பி.ஆர்.பாண்டியன்
234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்க தயங்கமாட்டோம் - பி.ஆர்.பாண்டியன்

By

Published : Oct 20, 2020, 6:27 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய உற்பத்திப் பொருள்களை கொள்முதல் செய்வதில் தொடர்ந்து குளறுபடிகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக, தமிழ்நாடு அரசால் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட சம்பா நெல் மூட்டைகள் தற்காலிக கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, அறுவடை செய்யப்பட்டுள்ள குருவையும் கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அரசு வேறிடத்திற்கு மாற்றவில்லை.

இதனால் விவசாயிகள் அன்றாடம் அறுவடை செய்யக் கூடிய விளைப்பொருள்களை கொள்முதல் நிலைய பணியாளர்கள் கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். அறுவடை செய்த நெல் உள்ளிட்ட விளைப்பொருள்களை வேறு வழியில்லாமல் விவசாயிகள் வீதிகளில் கொட்டி வைத்து, மழை நீரில் அடித்துச் செல்வதைப் பார்த்து கண்கலங்கி மனமுடைந்து நிற்கின்றனர்.

இதற்கு நிரந்தர தீர்வு காண உயர்மட்ட குழுவை அனுப்பி வையுங்கள் என்று வலியுறுத்தியும் இதுவரையிலும் தமிழ்நாடு அரசு செவி மடுக்கவில்லை. மேலும், கடந்த காலங்களில் 51 லாரி ஒப்பந்ததாரர்களுக்கு தமிழ்நாடு முழுவதுமுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்பந்தம் செய்து நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் கிடங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய நிலை இருந்தது.

தற்போது, 51 ஒப்பந்ததாரர்களை ஒழித்துவிட்டு அதை ஒரே நிறுவனத்தின் ஆதிக்கத்தின் கீழ் ஒப்பந்தம் போட்டு ஒப்படைத்துள்ளனர். இதனால் அந்த ஒப்பந்ததாரர்களை கட்டுப்படுத்துவதற்கோ, கண்காணிப்பதற்கோ மாவட்ட அலுவலர்களுக்கு வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல, நெல் மூட்டையை எடுத்துச் செல்வதில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.

இதனால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து முளைத்து வீணாக கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையை போக்க அரசு உரிய நடவடிக்கையை மேற்கொண்டு தீர்வு காண முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விவசாயிகளை பிரச்னைகளின் அடிப்படையில் ஒன்றுபடுத்த முயற்சி மேற்கொள்ள டிசம்பர் 1ஆம் தேதி முதல் பரப்புரை பயணம் தொடங்க உள்ளோம்.

குறிப்பாக, சமீபகாலமாக விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து போராடக்கூடிய அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகளை புறந்தள்ளி அரசியல் கூட்டணி என்கிற பார்வையோடு போராட்டங்கள் நடத்துவதால் போராட்டங்களில் நோக்கங்கள் திசை திருப்பப்படுகிறது. எனவே, விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க அவர்களை அரசியல் பார்வையோடு ஒன்றுபட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளை ஒன்றிணைத்து வருகிற சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி எங்களுடன் கருத்தொற்றுமைக் கொண்டவர்களை ஒன்றிணைக்கவும், விவசாய விரோத சட்டங்களுக்கு எதிராகவும் எங்கள் பரப்புரை பயணம் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டில் தேவையேற்பட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி களமிறங்கவும் தயங்க மாட்டோம் என நாங்கள் எச்சரிக்கிறோம். தமிழ்நாட்டில் வரும் 2021ஆம் ஆண்டானது, ஒரு போராட்ட ஆண்டாகவே இருக்கும் என என நான் எச்சரிக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details