உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகம் எடுக்க ஆரம்பித்து வருகிறது. இதனை தடுக்கும் முயற்சியாக மக்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதும், சமூக இடைவெளியை உருவாக்கவும் 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்ததையொட்டி மக்கள் அனைவரும் வீட்டிலேயே பதுங்கியுள்ளனர்.
இந்நிலையில் தங்கள் உயிரையும் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ளாமல் தூய்மைக் காவலர்கள் தங்கள் பணிகளை மக்களுக்காக சிறப்பாக சேவை செய்து வருகின்றனர்.
சாலையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள் இந்நிலையில் துப்பரவு பணியாளர்களை இனி யாரும் அப்படி அழைக்கக்கூடாது என்று அவர்களுக்கு தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் என அழைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.தற்போது மக்கள் யாரும் வெளியே நடமாடக் கூடாது என்று அறிவிப்பு இருக்கும் இந்நேரத்திலும் தூய்மைக் காவலர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து வெளியில் வந்து இரவு, பகலாக மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர்.
இவர்கள் காலையில் ஐந்து மணி முதல் தங்களது பணிகளை தொடங்கி மாலை ஆறு மணி வரை பணிகளை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் அனைவரும் எங்கு சென்றாலும் கையுறை முகக் கவசம் அணிந்து கொண்டே செல்லும் இந்த வேளையிலும் இவர்கள் அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகளை கையுறை இல்லாமலும் முகக் கவசம் இல்லாமலும் அந்தக் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
மக்களின் நலன் காக்கும் தூய்மை காவலர்கள் அவர்களுக்கு கரோனா பரவும் என்ற அச்சம் ஒரு புறம் இருந்தாலும் கரோனாவை விரட்டியடிப்போம் என்ற எண்ணத்தில் மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர்.இது குறித்து தூய்மைக் காவலர்கள் கூறுகையில்; எங்களுக்கும் கரோனா வைரஸ் பரவும் அச்சம் மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் மக்களுக்காக நாங்கள் வீதிகளில் இறங்கி குப்பைகளையும், சாக்கடைகளை சுத்தம் செய்து வருகிறோம்.
இதனால் மக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அவரவர்கள் தங்களது வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவேண்டும். மக்களுக்காக நாங்கள் வீதிகளில் இறங்கி பணிகளை செய்து வருகின்றோம். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மக்களுக்காக நாங்க இருக்கோம் தூய்மை காவலர்கள் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், “எங்கள் குடும்ப உறுப்பினர்கள் தூய்மைப் பணி மக்களுக்காக செய்து வருவது மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் கரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்ற பயமும் இருந்து வருகிறது. ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களுக்காக நீங்கள் தூய்மைப் பணிகளை செய்யுங்கள் என்று நாங்களே கூறி அனுப்பி வைக்கின்றோம்” என்று கூறுகின்றனர்.
மேலும் இந்த தூய்மைக் காவலர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் அவர்கள் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த ஊராட்சி மன்ற தலைவி