திருவாரூர் மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமையை மட்டும் சுமந்துவரும் மணலி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள், வாழ்வியல் ரீதியாகப் பின்னோக்கிச் செல்லும் அவலம் இன்றுவரை நீடித்துவருகிறது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மணி ஆற்றங்கரை தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அப்பகுதியின் நாலாபுறமும் புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்கு நடுவில் வாழ்ந்துவருகின்றனர் அம்மக்கள். நடக்க சரியான பாதை இல்லை, சேரும் சகதியுமாய் கிடக்கும் நடைபாதை, வேயப்படாத கூரை வீடுகளாய் காட்சியளிக்கின்றன.
இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல் மிகவும் மோசமான சூழலில் வாழ்ந்துவருகின்றனர். அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம் போன்ற எந்த வசதியும் சரிவர கிடைக்காததாலும் புதுச்சேரி மாநிலமான அம்பகரத்தூர் என்ற பகுதியை நம்பியே இப்பகுதி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். நான்கு புறமும் புதுச்சேரி யூனியன் பகுதிகளை கொண்டு நடுவில் தமிழ்நாட்டு கிராம மக்கள் மாட்டிக்கொண்டதால், இவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் எந்த ஒரு திட்டமும் சரிவர கிடைப்பதில்லை.