திருவாரூர்: பாதாள சாக்கடை திட்டத்திற்கு பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால் திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்தப்படுகின்றனவா என்ற ஒரு கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படி முறையாக செயல்படுத்தாத காரணத்தால், சாக்கடை குளத்தின் அருகில் பல விதமான நோய்த் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள பேரளம் பேரூராட்சிக்குட்ப்பட்ட புதுத் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இச்சூழலில் இக்குடியிருப்பு பகுதிக்கு அருகில் பேரளம் பேரூராட்சிக்குட்பட்ட தேரடிகுளம் உள்ளது. இக்குளத்தை கடந்த 20 வருடங்களுக்கு முன்பு குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்க்கும் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது பேரூராட்சிக்கு உள்பட்ட புது தெரு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தப்படும் கழிவுகள் அனைத்தையும் நேரடியாக தேரடி குளத்தில் விடப்பட்டு வருவதால் குளம் முழுமையாக சாக்கடைகள் நிரம்பி காட்சியளிக்கின்றன.
இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்களுக்கும் குழந்தைகளுக்கும் டெங்கு மலேரியா,மற்றும் காலரா போன்ற தொற்று நோய்கள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுகுறித்து பேரளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் சம்பந்தப்பட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதால், இந்த பிரச்னை கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தொடர்ந்து சாக்கடைக் கழிவுகளை குளத்திற்குள் விடுவதால், தண்ணீர் முழுவதும் வழிந்து விவசாய நிலத்திற்குள் புகுந்து விடுவதால் குளத்திற்கு அருகில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் சாக்கடை நீரால் நிரம்பி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தேரடி குளத்தை முழுமையாக தூர்வாரி, கழிவுநீர் வருவதை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையாக உள்ளது.
20 வருடங்களாக சாக்கடை அருகே வசித்து வரும் மக்கள் - கண்டுகொள்ளாமல் அலட்சியத்துடன் இருக்கும் பேரூராட்சி