தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒற்றைக்காலுடன் 18 ஆண்டுகளாக அரசின் உதவிக்காக அலையும் மாற்றுத்திறனாளி பெண் - thiruvarur district news in tamil

மூன்று சக்கர வாகனத்திற்காகவும், குடியிருக்க ஒரு வீட்டிற்காகவும் 18 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலைந்து திரிகிறார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் காமாட்சி.

tvr-disabilities-women-govt-help-requst
ஒற்றைக்காலுடன் 18ஆண்டுகளாக அரசின் உதவிக்காக அலையும் மாற்றுத்திறனாளி பெண்

By

Published : Jul 14, 2021, 10:10 PM IST

திருவாரூர்:தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் உரியவர்களைச் சென்று சேர்வதில் பல்வேறு சிரமங்களும், சிக்கல்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது அரசு அலுவலர்களின் அலட்சியப்போக்குதான். இதனால், பல சிக்கல்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது.

18 ஆண்டுகளாக மூன்று சக்கர வாகனத்திற்கும் ஒரு சொந்த வீடு வேண்டியும் அலைந்துகொண்டிருக்கும் தம்பதிதான் திருவாரூர் அருகேயுள்ள கேக்கரை மாரியம்மன் கோயில் தெருவில் வசித்துவரும் காமாட்சி-செல்வராஜ் தம்பதியினர். இந்தத் தம்பதியினருக்கு ஐயப்பன், சீதலாதேவி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மாற்றுத்திறனாளியான காமாட்சி தமிழ்நாடு அரசின் உதவிக்காக கடந்த 18 ஆண்டுகளாக மூன்று சக்கர வாகனம் வேண்டி விண்ணிப்பித்துவருகிறார். அதேபோல், குடியிருக்க வீடு வேண்டியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நடையாய் நடந்துகொண்டிருக்கிறார்.

மாற்றுத்திறனாளி காமாட்சி

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் நாயை விரட்டுவதுபோல் விரட்டியடிப்பதாக கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கிறார் காமாட்சி. "எங்களுக்குச் சொந்த வீடு கிடைாயது. வாடகை வீட்டில்தான் வசித்துவருகிறோம். மாதம் ரூ.2,000 வாடகை கொடுக்க வேண்டும். வருமானத்திற்காக பூக்கடை வைத்திருந்தோம். அதில் நாளொன்றுக்கு 100 ரூபாய் கிடைக்கும். அந்தச் சொற்ப வருமானத்தில்தான் குடும்பம் நடத்திவருகிறேன்.

குடும்பத்துடன் மாற்றுத்திறனாளி காமாட்சி

என்னுடைய கணவர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு வருமானம் இல்லை. திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் பூக்கடை வைத்து பிழைப்பு நடத்திவந்தேன். ஆனால், திருவாரூர் நகராட்சி ஊழியர்கள் அங்கே கடை வைக்கக்கூடாது எனக் கூறி கடையை அடித்து உடைத்துவிட்டனர்.

மேலும், எனக்கு ஒரு கால் சரிவர இல்லாததால் நடந்துசெல்வதற்குச் சிரமமாக இருப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று சக்கர வாகனம் வேண்டி விண்ணப்பித்து இத்தோடு 18 ஆண்டுகள் ஆகின்றன.

இதுவரை அலைந்துகொண்டேதான் இருக்கிறேன் வாகனம் இன்னும் கிடைத்தபாடில்லை. இதேபோல்தான் சொந்த வீடு வேண்டி விண்ணப்பித்ததும்.

குடும்பத்துடன் மாற்றுத்திறனாளி காமாட்சி

என்னுடைய குழந்தைகளை வைத்துக்கொண்டு அன்றாட உணவிற்கு வழியில்லாமல் தவித்துவருவதால் என்ன செய்வதென்று புரியாமல் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் சென்றேன்.

ஆனால், அங்கு அலுவலர்கள் சமாதானம் செய்து மூன்று சக்கர வாகனமும், வீடும் வழங்குவதாக உறுதியளித்தனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குழந்தைகளைப் படிக்க வைக்கவும், உணவிற்கு வழி இல்லாமலும் தவித்துவருகிறோம். ரேஷன் கடைகளில் தரக்கூடிய 15 கிலோ அரிசியை வைத்துதான் குடும்பத்தை நடத்திவருகின்றோம்.

இதனால், எங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு 18 ஆண்டுகாலப் போராட்டத்தின் பலனாக மூன்று சக்கர வாகனமும், குடியிருக்க ஒரு நல்ல வீடும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு கட்டிக் கொடுக்க வேண்டும்" எனக் கண்ணீர் மல்க கோரிக்கைவிடுக்கிறார் காமாட்சி.

இதையும் படிங்க:வங்கிக்கடனை கட்ட அவகாசம் கேட்டு தென்காசி மாற்றுத்திறனாளி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு!

ABOUT THE AUTHOR

...view details