திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மயான கொட்டகை இல்லாமல் வயல்களின் வரப்புகளில் இறந்தவர்களின் உடல்களை புதைத்து வந்தனர். இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இவர்களுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு மயான கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இருந்தபோதிலும் இந்த மயான கொட்டகைக்கு செல்வதற்கு சாலை வசதி அமைத்துக் கொடுக்கப்படாததால் இறந்தவர்களின் உடல்களை வாய்க்கால்களை கடந்து வயல்களின் வழியாக இறந்தவர்களை சுமந்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது. இதுகுறித்து நமது தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு மாவட்ட ஆட்சியர், தாசில்தார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அரசு அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மயான கொட்டகைக்கு சாலை வசதி அமைத்துக் கொடுக்கப்படும் என உறுதியளித்து சென்று ஓராண்டை கடந்தும் இதுவரை சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை.