திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பாலகிருஷ்ணா நகரில் சட்டமன்ற அலுவலகக் கட்டடம் உள்ளது. இங்கு திமுக சட்டமன்ற உறுப்பினராக டி.ஆர்.பி ராஜா கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து, தற்போது வரை இருந்து வருகிறார்.
இந்நிலையில், மன்னார்குடி சட்டமன்ற அலுவலகக் கட்டடத்தின் மேற்பகுதி திடீரென்று சேதமடைந்து விழுந்ததால் அலுவலக ஊழியர்கள், நிர்வாகிகள் அலறியடித்து வெளியே ஓடி வந்தார்கள். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற டி.ஆர்.பி ராஜா, அலுவலகத்தைப் பார்வையிட்டார்.
பின்னர், பொதுப்பணித்துறை அலுவலகத்திற்குச் சென்று உதவி செயற்பொறியாளர் சிங்காரத்திடம் பேசிய அவர், 'முதன்முறையாக 2011ஆம் ஆண்டு பதவிக்கு வந்த காலத்திலிருந்தே சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் அல்லது வேறு எந்த நிதியிலிருந்தும் கட்டடத்தைப் பராமரிக்காமல், என்னுடைய சொந்த செலவிலேயே தான் பராமரித்து வந்துள்ளதாகவும், கஜா புயலில் சேதமான கட்டடம் தற்போது பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது. இது அரசுக்குச் சொந்தமான கட்டடம் என்பதால் பொதுப்பணித்துறை தான் பராமரித்துத் தரவேண்டும். இல்லையெனில், கட்டடத்தைத் தானே சொந்தமாகப் பராமரித்துக் கொள்கிறேன். அதற்கான அனுமதியை மட்டும் தருமாறு' கேட்டுக் கொண்டார்.
மன்னார்குடி சட்டமன்ற அலுவலகக் கட்டடம் இதற்குப் பதிலளித்த அலுவலர்கள், 'இன்னும் 10 நாட்களில் கட்டடத்தை நாங்களே சரி செய்து தருகிறோம்' எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கழிவுநீர் தொட்டி உயிரிழப்பு விவகாரம் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு!