குடியரசு தினத்தன்று திருவாரூரில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு திருவாரூர்: திருவாரூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் மாவட்ட அளவிலான கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசின் விவசாய மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து, வரும் 26ஆம் தேதி திருவாரூரில் டிராக்டர் மற்றும் மோட்டார் பைக் பேரணி நடத்தப் போவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூட்டத்திற்குப் பின்னர் திருவாரூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர் மாசிலாமணி செய்தியாளர்களிடம் பேசியதாவது, “அகில இந்திய அளவில் செயல்படுகின்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியில் இடதுசாரி அமைப்புகளின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கம், மற்றும் ஏனைய விவசாய சங்கங்கள் உள்ளன.
அத்தகைய ஐக்கிய விவசாயிகள் சங்கம், ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களுடன் இணைந்து, வரும் 20ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரையில் மத்திய அரசு கடைபிடித்து வருகின்ற விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து, திருவாரூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் பேரைச் சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தெருமுனை கூட்டங்கள் நடத்தியும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளது.
அதனைத் தொடர்ந்து, வரும் 26ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்கள், 500க்கும் மேற்பட்ட மோட்டார் பைக்குகளில் திருவாரூரில் பேரணி நடத்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். மேலும், மத்திய அரசு, விவசாயிகள் போராட்டத்தின்போது ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல், மீண்டும் மின்சார திருத்த மசோதாவைக் கொண்டு வரவும், உதய் மின் திட்டத்தை அமல்படுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருவது குறித்தும், விவசாயிகள் விரோதப் போக்கை கடைபிடித்து வருவது குறித்தும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
குறிப்பாக, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரமாக இந்த பேரணி மற்றும் பிரச்சார இயக்கம் அமையும். தமிழ்நாட்டில் சமீபத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த மழையைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக நெற்பயிர்கள் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே, நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிலக்கடலை, உளுந்து போன்ற பயிர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துவோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:நாகை எம்பி செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதி; உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்!