திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிவர் புயலால் தென்னை மரங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கக் கூடும் என்கிற எச்சரிக்கை வந்திருக்கிறது. காப்பீடு செய்வதற்கு நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை கூறி தட்டிக் கழிக்கும் நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போது காப்பீடு செய்தாலும் பெறும் மழையோ புயல் காற்றினால் பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெற முடியாது என்று கை விரிக்கிறது.
இதை தமிழ்நாடு அரசு, மத்திய அரசோடு பேசி தீர்வு காண முன் வரவேண்டும். நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு காப்பீடு செய்வதற்கு மத்திய, மாநில அரசுகளுடைய நடவடிக்கைகளால் காலம் கடந்து விட்டது. குறிப்பாக பயிர் காப்பீட்டு நிறுவனம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை டெண்டர் மூலம் தான் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கத்தில் தான் இப்கோ டோக்தியோ என்ற நிறுவனத்திற்கு காப்பீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுக்கும் அதிகாரத்தை ரத்து செய்ததால், மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகளுக்கு மட்டும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அவர்களுக்கான பிரீமியம் மட்டும் பெறப்பட்டுள்ளது. கடன் பெறாத விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் பிரீமியம் பெற மறுத்து விட்டன. இதனால், 80 விழுக்காடு விவசாயிகள் உரிய காலத்தில் பிரீமியம் செலுத்த முடியாமல், தனியார் இணையதள நிறுவனங்களில் குவிந்து காத்துள்ளனர்.