திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் வரலாற்றை அறிந்துக் கொள்ளும் வகையில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரம் சதுரடியில் 'கலைஞர் கோட்டம்' கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை முதலே வெகு விமர்சையாக நடைபெற்றது.
திறப்பு விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், மாலதி குழுவினர் பாட்டரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பிற்பகல் 3.30 மணியளவில் 'கலைஞர் கோட்டம்' மற்றும் 'கலைஞர் சிலை' ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி செல்வி ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர், கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். முன்னதாக கலைஞர் தோட்டத்தில் உள்ள அருங்காட்சியகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்களும் திறக்கப்பட்டு அதில் நான்கு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் இன்று திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:TNPSC: குரூப் 4 காலி பணியிடங்கள் 10,219ஆக உயர்வு!