திருவாரூர்: ஆன்லைன் ஆப் மூலம் கடன் பெற்ற இளைஞரிடம் மோசடியாக அதிக பணம் பெற்றதோடு, அந்த இளைஞரின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதால் மனமுடைந்த இளைஞர் இன்று (ஜூலை 26) தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆன்லைன் ஆப் மூலம் லோன் வழங்கியதாக கூறப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட ஏரி வேலூர் ஊராட்சியைச் சேர்ந்த செல்லந்திடல் பகுதியைச் சேர்ந்தவர், ஸ்டாலின் - சாவித்திரி தம்பதியினர். விவசாயக்கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு மட்டும் திருமணம் ஆகியநிலையில், இளைய மகன் ராஜேஷ்(27) பி.ஏ முடித்துவிட்டு கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரத்தில் மகளிர் குழு நுண்கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜேஷ் ஆன்லைன் செயலி (Online Loan App) மூலம் அடிக்கடி கடன் வாங்கி, அதனை உரிய முறையில் திருப்பிச் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று ராஜேஷ் வீட்டிற்கு அருகில் உள்ள வயல்வெளியில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து தொலைபேசியில் மிரட்டல்:இதனைத்தொடர்ந்து அவர் உடலைக் கைப்பற்றிய வலங்கைமான் காவல்துறையினர் உடற்கூராய்வுக்குப் பின் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முதற்கட்டமாக ராஜேஷுக்கு மிரட்டல் வந்த தொலைபேசி எண் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்துள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் மூலம் அடிக்கடி தொந்தரவு:ராஜேஷ் கடந்த வருடம் ஆன்லைன் செயலி மூலம் ரூ.5000 கடன் பெற்றதாகவும், அதற்கு அந்நிறுவனம் ரூ.20 ஆயிரம் வரை கேட்டு மிரட்டியதாகவும் அதனை ராஜேஷ் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு பணத்தை செலுத்தக் கூறி, வாட்ஸ்அப் மூலம் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.