திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமை தாங்கி பேசுகையில், “வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கவுள்ள சூழலில் நாம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழையின்போது மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வருவதற்கான அனைத்து வசதிகளும் மற்றும் தங்க வைப்பதற்கான முகாம்கள் பாதுகாப்பானதாக இருக்கிறதா எனவும், போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை அலுவலர்கள் இப்பொழுதே ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு குடிநீர், உணவு உடனடியாக கிடைக்கும் வகையில் உணவுப் பொருட்களின் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். கரோனா தொற்று நிலவுகின்ற இச்சூழலில் அதற்கேற்ப அரசு அறிவுரைகளைக் கடைப்பிடிக்கின்ற வகையிலும் சுகாதார நடவடிக்கைகளை அமைந்திட வேண்டும்.