திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. திருவிழாவில் 10-ஆவது நாளான நேற்று(திங்கட்கிழமை) காவடி எடுத்தல், சாமி வீதி உலா நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவை காணவந்த உப்பூர் பிரதான சாலை பகுதியை சேர்ந்த முருகதாஸ் மகன் அருள் முருகதாஸ் (வயது 17), கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் பரத்குமார் (வயது 17), நாகப்பட்டினம் மாவட்டம், தாணிக்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த முருகபாண்டியன்(வயது 24) ஆகிய 3 இளைஞர்கள் காவடி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டு சோர்வுடன் இருந்ததால் கோயிலுக்கு அருகே உள்ள ரயில் தண்டாவளத்தில் படுத்து தூங்கியுள்ளனர்.
இளைஞர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது அதிகாலை 3 மணியளவில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயில் மோதியதில், அருள் முருகதாஸ் தலைத் துண்டாகி உயிரிழந்தார். முருகபாண்டியன் தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலினார். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பரத்குமார், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.