தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தற்போதைய நான்காம் கட்ட ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் வெளி மாநிலங்களில் பணியாற்றி வந்த ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு தற்போது அழைத்து வரப்படுகின்றனர்.
அந்த வகையில், பல்வேறு வெளி மாநிலங்களில் பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், தற்போது சொந்த ஊரான திருவாரூருக்குத் திரும்பியுள்ளனர். இவர்கள் அனைவரும் நீலக்கரையில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இவர்களில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வக உணவகத்தில் பணியாற்றித் திரும்பியுள்ள எடையூர் பகுதியைச் சேர்ந்த நபர், ஒரிசாவில் பொறியாளராகப் பணியாற்றி எடையூர் திரும்பிய நபர், மும்பையில் பணியாற்றித் திரும்பியுள்ள அந்தோணி, நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர் என மொத்தம் மூன்று பேருக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று பேரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று புதிதாக மூன்று பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க :குறைதீர் கூட்டத்தில் கோரிக்கைகளை அடுக்கிவைத்த திருவாரூர் விவசாயிகள்!