திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், பிலாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இவரது மனைவி ராணி, குடவாசல் வீட்டு வசதி சங்க இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு இருவரும் உறங்கிக் கொண்டிருந்த போது, சுமார் 2 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ராதாகிருஷ்ணன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துள்ளார். இதையடுத்து, வீட்டினுள்ளே சென்று உறங்கிக் கொண்டிருந்த ராணியின் கழுத்தில் அணிந்திருந்த ஏழு சவரன் தங்கத் தாலி சங்கிலியை அறுத்துள்ளார்.
அதில், வலி தாங்க முடியாத ராணி அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டார். அப்போது, ராதாகிருஷ்ணன் எழுந்து பார்த்தவுடன் அடையாளம் தெரியாத நபர் தங்கச் சங்கிலியை திருடிக்கொண்டு, தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் இதுகுறித்து, குடவாசல் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.