தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மரங்கள் அடர்ந்த காவிரி படுகையே எங்கள் இலக்கு': ஓங்கி ஒலிக்கும் இளைஞர்களின் குரல்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் ஆடிய கோரத்தாண்டவம் அதிகம். திருவாரூரில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை அடியோடி சாய்த்து விட்டுச் சென்றது கஜா. ஈடுசெய்ய முடியாத இழப்பைச் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் இளைஞர்கள். வனம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரில் ஒன்றிணைந்திருக்கும் கல்லூரி மாணவர்கள் டெல்டா மாவட்டங்களில் சிறு வனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்....

miyawaki forest in delta district
miyawaki forest in delta district

By

Published : Jan 1, 2021, 8:00 AM IST

Updated : Jan 7, 2021, 4:23 PM IST

திருவாரூர்:

காட்சி : 1

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தூங்கி எழுந்த டெல்டாவாசிகளுக்கு அந்த விடியல் வழக்கமானதாக இருக்கவில்லை. இரண்டு நாட்களாக கஜா புயல் பற்றிய எச்சரிக்கை செய்திகளைக் கேட்டு, ஏதோ நம்பிக்கையில் உறங்கச் சென்றவர்களை ஏமாற்றி கோர தாண்டவமாடியிருந்தது புயல்.

வீடு வாசல், மாடு கன்னு, தோட்டம் தொறவு, மரங்கள் என அனைத்தையும் சின்னாபின்னமாக்கி புயல் உருக்குலைத்து போட்ட வாழ்க்கை கொடூரமானது. அன்று 'ஏ..கடவுளே உனக்கு கண்ணில்லையா' என வானைப் பார்த்து எழுந்த சாபங்கள் ஏராளம்.

காட்சி : 2

2020 ஆண்டில், கையில் மண்வெட்டி, தண்ணீர் குடங்கள் சகிதம், தாங்கள் நட்டுப் பராமரித்து வரும் மரக்கன்றுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் இளைஞர்கள் சிலர். கஜா துடைத்தெடுத்துச் சென்ற மரங்களுக்குப் பதிலாக, இரண்டு ஆண்டுகளில் லட்சம் மரங்களை நட்டுப் பராமரித்தும், பராமரிப்புக்கு உதவியும் வருகிறார்கள் 'வனம்' என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள். அன்று இயற்கைக்கு சாபம் தந்த குரல்கள் இன்று மரம் நட்டுப் பராமரிக்கும் இளைஞர்களை வாயார வாழ்த்துகின்றன.

கஜா புயலின் தாக்கத்தால், திருவாரூர் மாவட்டத்தில் மட்டும், 4 லட்சத்து 57 ஆயிரத்து 864 தென்னை மரங்கள், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 460 சாலையோர மரங்கள் என 6 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இத்தனை பெரிய சேதத்தை யார் சரி செய்வது, எப்படிச் சரிசெய்வது என அம்மாவட்ட மக்கள் விழி பிதுங்கி போயினர். மக்களின் அந்த வாட்டத்தைப் போக்க களம் இறங்கியுள்ளனர் வனம் தன்னார்வலர் அமைப்பினர்.

கல்லூரி காலங்களில் நாட்டு நலப்பணி திட்டத்தில் இணைந்து மரங்கள் நட்டபோது தொற்றிக் கொண்ட ஆர்வம் கடந்த இருபது ஆண்டுகளாய், கலைமணி என்பவரை மரம் நடும் பணியினைச் செய்ய வைத்துள்ளது. ஒன்றிரண்டு மரங்கள் நட்டு எதுவும் ஆகப்போவதில்லை என எண்ணிய கலைமணி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய அமைப்பு தான் "வனம்". தற்போது இந்த அமைப்பு தன்வார்வமுள்ள இளைஞர்களின் துணையுடன் குறுங்காடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

பள்ளிவளாகங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்களில் குறுங்காடுகளை உருவாக்கி வரும் வனம் அமைப்பினர். கடந்த மூன்று ஆண்டுகளில், ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இவர்களின் முயற்சியால் கூத்தாநல்லூர், வடகுடி, பெரும்பண்ணையூர்,வெட்டிக்காடு கொட்டாரக்குடி உள்ளிட்ட பகுதிகளில், 20க்கும் அதிகமான குறுங்காடுகளை உருவாக்கப்பட்டுள்ளன.

"டெல்டா மாவட்டங்களில் காடுகள் குறைவு அந்த குறையைப் போக்கும் வகையில், குறுங்காடுகளை உருவாக்கி வருகிறோம். இந்த குறுங்காடுகளால் பசுமைப் பரப்பு அதிகமாகிறது. டெல்டா மாவட்டங்களில் இது வரை 23 குறுங்காடுகளை உருவாக்கியிருக்கிறோம். இந்த முயற்சியில் தன்னார்வமுள்ள கல்லூரி இளைஞர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்" என்கிறார் வனம் கலைமணி.

ஜப்பானிய தாவரவியலாளா் அகிரா மியாவாக்கியின் பரிந்துரைத்த இடைவெளி இல்லா அடா்காடு என்ற தத்துவப்படி, ‘மியாவாக்கி’ முறையில் குறுவனங்களை உருவாக்கி வருகின்றனர் வனம் அமைப்பினர். இவர்கள் உருவாக்கும் குறுவனங்கள் வெறும் பசுமைப் பரப்பை அதிகரிக்க செய்வதை மட்டும் செய்யாமல், பறவைகள் தங்கி வாழும் ஒரு பல்லுயிர் பெருக்கச் சூழலையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.

இதற்காக, கொடுக்காப்புளி, மகிழம், புங்கன், நாவல், பூவரசு ,வேம்பு, உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட இயல் தாவரங்களைக் கொண்டே காடுகள் உருவாக்கப்படுகின்றன. "ஆரம்பத்தில், நீங்க வந்து காடுகளை உருவாக்கிட்டு போய்ருவீங்க. அதுக்கு தண்ணீ ஊத்தி யாரு பராமரிக்கிறது என எல்லோரும் கேட்டனர்.

மரங்கள் நடுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதும், முதலில் அதைசுற்றி வேலி அமைத்து தண்ணீர் வசதி செய்த பிறகுதான் மரங்கள் நடத்தொடங்குகிறோம். மரங்களை பராமரிக்க கிராமங்களில் கிராம வனம் அமைப்பை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறோம். தற்போது 110 குறுங்காடுகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம்" என தங்களின் பணியினை விவரிக்கிறார் கலைமணி.

ஒரு குறுவனம் உருவாக்க ரூ. 75ஆயிரம் வரை செலவாகும் என்கிற கலைமணி, அதற்கான நிதியை தன்னார்வமுள்ளவர்களிடமிருந்து திரட்டுகிறார். அதே போல் வனத்தை உருவாக்க தேவையான இயல் தாவர மரக்கன்றுகளை வனம் அமைப்பினரே தயாரிக்கின்றனர்.

கல்லூரி மாணவர்களின் படிப்பு கெடாத வண்ணம், விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் வனம் அமைக்கும் பணியினைச் செய்துவரும் வனம் அமைப்பினர், தாங்கள் உருவாக்கிய வனங்களின் வளர்ச்சியை மாதத்தில் மூன்று முறை சென்று பார்த்து கிராம வனம் அமைப்பினருக்குத் தேவையான ஆலோசனை வழங்கியும் வருகின்றனர்.

டெல்டா முழுவதும் குறு வனங்களை உருவாக்க முயற்சித்து வரும் வனம் அமைப்பினர், மரங்களடர்ந்த காவிரியே எமது லட்சியம் என்கின்றனர். காலத்தின் கட்டாயத் தேவையான இவர்களின் குரல் தமிழ்நாடெங்கும் வேர் பிடிக்கட்டும்... வாழ்த்துகள் தோழர்களே!

இதையும் படிங்க:தந்தைக்கு மகளாற்றும் உதவி: தச்சு வேலையில் அசத்தும் 13 வயது சிறுமி!

Last Updated : Jan 7, 2021, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details