திருவாரூர்: கரோனா பெருந்தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு முதல் பல கட்டமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தற்போது கரோனா தொற்று படிபடியாக குறைந்து வருவதனால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மாநிலம் விட்டு மாநிலம் செல்லக்கூடிய ரயில் சேவை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மீண்டும் தொடங்கிய சேவை
அந்த வகையில் திருவாரூரிலிருந்து காரைக்குடி வரை முன்பதிவில்லாத ரயில் சேவை இன்று (ஆக. 5) முதல் இயக்கப்படுவதாகவும், இந்தச் சேவையானது மறுஅறிவிப்பு வரும் வரை இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையடுத்து இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாள்களில், திருவாரூரில் இருந்து 8.30 மணிக்கு புறப்பட்டு 2.30 மணிக்கு சென்று சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மேலும் இந்த முன்பதிவில்லா ரயில் மாங்குடி, மாவூர், திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, ஆலங்குடி, பேராவூரணி, அறந்தாங்கி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம்!