திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
நிவர், புரெவி புயல் காரணமாக பெய்துவரும் கனமழையால், அறுவடைக்குத் தயாராகிவந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து கடந்த 10 நாள்களாக வெயில் வாட்டிவருவதால் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அறுவடைப் பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் வேளாண் துறை சார்பில் வழங்கப்பட்டுவந்த 8 நெல் அறுவடை இயந்திரங்கள் பயன்பாட்டில் இருந்துவந்தது. தற்சமயம், ஆறு இயந்திரங்கள் பழுதாகியுள்ளதால், இரண்டு இயந்திரங்கள் மட்டுமே மாவட்டம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. இதனால், சிறு, குறு விவசாயிகள் அறுவடை இயந்திரம் கிடைக்காததால் சிரமத்தில் தவித்துவருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தவிப்பு தனியார் அறுவடை இயந்திரங்களை வைத்து அறுவடை செய்தால் ஒரு மணிநேரத்திற்கு ரூ.2700 முதல் ரூ.3000 வரை வசூலிப்பதால் விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகவில்லை என்பதால் வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் அறுவடை இயந்திரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
நெல் அறுவடைப்பணியில் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேளாண் துறை மூலம் வழங்கப்படும் நெல் அறுவடை இயந்திரத்தை தயார் செய்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நெற்பயிரைத் தாக்கியுள்ள நெல் பழம் நோய்: திருவாரூர் விவசாயிகள் வேதனை