திருவாரூர் மாவட்டம், வேலங்குடி ஊராட்சி அருகே உள்ள கமுகக்குடி கிராமத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த குடும்பங்களுக்காக கடந்த 2015ஆம் ஆண்டு மயான கொட்டகை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது.
ஆனால், அதற்கான சாலை வசதி இன்று வரை அமைத்துத்தரப்படாத காரணத்தினால் இறந்தவர்களின் உடல்களை சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வயல்களையும் வரப்புகளையும் கடந்து தட்டுத்தடுமாறி காயங்கள் ஏற்படும் நிலையில், தூக்கிச் செல்லும் அவல நிலை அப்பகுதி மக்களுக்கு நீடித்து வருகிறது.
இன்று (ஜூலை 12) அந்தப் பகுதியை சேர்ந்த கீதா என்பவர் உடல்நலக் குறைவால் இறந்துள்ளார். அவரது உடலை தூக்கிச் சென்றவர்கள், உடலை வயல் வரப்புகள் வழியாக மிகவும் சிரமத்துடன் தூக்கிச்சென்றனர்.
வயல் வழியே சடலத்தை தூக்கிச் செல்லும் கிராம மக்கள் இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், "ஐந்து வருடங்களுக்கு முன்பாக, பல போராட்டங்களுக்குப் பிறகு எங்களுக்கு மயான கொட்டகை அமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அதற்கான சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
இதுகுறித்து பலமுறை வட்டாட்சியர், அமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகம் எனப் பல்வேறு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அலுவலர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வந்து பார்த்துவிட்டுச் சென்றும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்த அவலம் தொடர்ந்து 15 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்னையில் உடனடியாக தலையிட்டு மயான கொட்டகைக்குச் சாலை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க... ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: டெல்லியில் பழுதடைந்த சாலைக்குத் தீர்வு!